Flipkart

Breaking News

சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது ஏன்??நீதிபதி குன்கா தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? நீதிபதி குன்கா தீர்ப்பு முழு விவரம்

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 27ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பின் முழு விவரம்:கடந்த, 1991 முதல் 1996 வரை, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில், அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், 53.6 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி உள்ளனர். ஆனால், அந்தச் சொத்துக்களை வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கணக்கை, வருமான வரித்துறைக்கு, அவர்களால் சரியாக காட்ட முடியவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், அவரின் வருமானம், 9.91 கோடி ரூபாய். அதில், அவரின் செலவு, 8.49 கோடி ரூபாய். இந்த வருமானத்தை மீறியே, அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும், தங்கள் பெயரிலும், சில நிறுவனங்கள் பெயரிலும், 53.6 கோடி ரூபாய்க்கு அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.இதுதொடர்பான, திருப்திகரமான கணக்கை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக்களை வாங்கி உள்ளதோடு, அதற்கான பணத்தை பெற, அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், கிரிமினல் சதிச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதை, அரசு தரப்பு, சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது.எனவே, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120 - பி, 109 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 13 -1இ மற்றும் 13 -2ன் கீழ், தண்டனை பெறக்கூடிய குற்றம் புரிந்துஉள்ளனர். அதனால் அவர்கள் குற்றவாளிகளே.ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவிக்க, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் துணையாக இருந்துள்ளனர் என்பதையும், அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. எனவே, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தை அவர் கட்டத் தவறினால், கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு உடந்தையாக இருந்த, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கும், நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் படுகிறது. அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக ஓர் ஆண்டு சிறையில் இருக்க நேரிடும். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் மற்றும் நிரந்தர வைப்பு நிதிகள், அபராதத் திற்கு ஈடாக எடுத்துக் கொள்ளப்படும். இதுதொடர்பாக, தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். வங்கிக் கணக்கில் உள்ள பணமானது, அபராதத் தொகைக்கு ஈடாகவில்லை எனில், நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் தங்க, வைர நகைகள் விற்கப்பட்டு, மீதமுள்ள அபராத தொகைக்கு வரவு வைக்கப்படும். அந்த நகைகளை, ரிசர்வ் வங்கிக்கோ அல்லது பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவே விற்கலாம். விற்றது போக, மீதமுள்ள நகைகள் அரசால் பறிமுதல் செய்யப்படும். ஜெயலலிதா உட்பட, நான்கு பேர் மற்றும் சில கம்பெனிகள் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களை எல்லாம், மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் அபராதத் தொகையில், 5 கோடி ரூபாயை வழக்குச் செலவுகளுக்காக, கர்நாடக மாநில அரசுக்கு வழங்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார். கடும் தண்டனை ஏன்? குவிக்கப்பட்ட சொத்துகளின் அளவை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த கடுமையான தண்டனை தேவைப்படுகிறது. அதிகாரமும், சொத்து குவிப்பும் சேர்ந்த கலவைதான், இந்த வழக்கின் அடிப்படை. குறுகிய காலத்தில் ஜெயலலிதாவும், இதர குற்றவாளிகளும் சொத்துகளை குவித்து இருப்பது, சட்டவிரோத சொத்துகளை குவிப்பதற்கு ஆட்சி அதிகாரம் எப்படி பயன்படும் என்பதற்கு தெளிவான உதாரணம். இது, ஜனநாயக அமைப்புக்கு உண்மையான ஆபத்தாகும். இவர்கள் செய்த குற்றங்கள், அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு) பாதிக்கு மேல் வழங்கத்தக்கவை. கடுமையான தண்டனை மூலம் ஊழலை ஒழிக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. அதன் நோக்கத்தை நிறைவேற்றுவது கோர்ட்டின் கடமை. உயர் பதவியில் இருப்போர் செய்யும் ஊழல்கள், கீழ்நிலைகளில் இருப்போரையும் ஊழல் செய்ய தூண்டி விடுவதுடன், அவர்கள் மீது உயர் பதவியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி விடும்.இவ்வாறு நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை