Flipkart

Breaking News

சிவனை வணங்கும் சிவன்

"சிவனை வணங்கும் சிவன்



மதுரை

எங்கும் நிறைந்து, தனக்கு அயலாக, தன்னைத் தவிர வேறெதுவும் அறியாத சிவம் தன்னைத்தானே பூஜித்து மிக உயர்ந்த ஆன்மிக கோலம் காட்டியருளிய தலமே மதுரையின் மத்தியில் உள்ள இம்மையில் நன்மை தருவார் ஆலயம். எங்கும் நிறைந்திருக்கும் சிவமே மாயா வேடம் பூண்டு லீலைகள் நிகழ்த்தி மீண்டும் தன்னைத் தானே கண்டு கொள்கிறது என்பது தத்துவம். ஆத்மபூஜா எனும் உபநிடதம் கூறும் இந்த தத்துவத்தை இங்கு இறைவன் இக்கோயிலில் நிகழ்த்தி காட்டியருளுகிறார். மிக உயர்ந்த அத்வைத நிலையில் தன்னைத் தவிர வேறெதுவும் இல்லாத காலப்பெருவெளியை கடந்து நின்ற விஷயத்தை, இப்படி பூவுலகில் மிக எளிமையாக லிங்க உருவில் எடுத்துக்கூறும் குருவின் அம்சமாக இத்தலத்தில் அமர்ந்திருக்கிறார்.
ஈசனை எப்படி பூஜிக்க வேண்டும் என சிவனே காட்டியருளும் அற்புதக்கோயில் இது. ‘ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க’ என்ற வரிகளுக்கேற்ப இங்கு இறைவன் சோமசுந்தரக் கடவுளாகவும், சுந்தரபாண்டிய மன்னனாகவும், லிங்க வடிவமாகவும், மீனாட்சியின் கணவனாகவும் காட்சியளிக்கிறார். பொதுவாக சிவாலயங்களில் லிங்க உருவை மட்டுமே வழிபடுவர். இங்கு சோமசுந்தரக் கடவுள், மீனாட்சியோடு சேர்ந்து தனது ஆத்ம லிங்கத்தை வழிபடுவதுபோல் கருவறையில் இடம் பெற்றிருப்பது வேறெங்கும் காணுதற்கரிது. இங்குள்ள லிங்கத்தின் கோமுகி வலது புறமாக இருக்கும். பொதுவாக லிங்கத்தில் கோமுகி பகுதி இடது புறத்தில் இருக்கும். இங்கு கருவறையில் உள்ள சுந்தரேஸ்வரர், மீனாட்சியை பார்த்தவாறு லிங்கம் அமைந்திருக்கும்.
மூர்த்தி தலம், தீர்த்த தலம் என்கிற பெருமை கொண்டது இத்தலம். இங்கு பரிவார தெய்வங்களான ஜுர ஹர லிங்கம், பிரம்மா, காலபைரவர் என அனைவரும் ஒருங்கே இடம் பெற்ற தலம். இங்கு வீற்றிருக்கும் அம்மன் நடுவூர் நாயகியாகவும், மத்தியபுரி நாயகியாகவும் தனி சந்நதியில் இடம் பெற்றுள்ளார்.
ஆவணி மூல உற்சவத்தின் 6வது நாளில் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் இக்கோயிலுக்கு வந்து லிங்கத்தை பூஜிக்கும் உற்சவ நிகழ்ச்சி காலையில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை வேளையில் சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடைபெறும். பொதுவாக திருவிழா நாட்களில் அபிஷேகம், ஆராதனைகள் எல்லாம் உற்சவருக்கே செய்யப்படும். அந்நேரத்தில் சந்நதி அடைக்கப்படும்.
ஆனால், இங்கு இந்நாளில் கருவறையில் இருக்கும் மூலவருக்கும், வெளியில் இருக்கும் உற்சவருக்கும் சமகாலத்தில் அபிஷேகம், ஆராதனை நடைபெறும் சிறப்பைக் காணலாம். வேறு எக்கோயிலிலும் இதனைக் காண இயலாது. பக்தர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தையும், இந்த பிறவியில் செய்த பாவத்தையும் நீக்கி மோட்சம் அளிப்பது மட்டுமல்ல. இந்த ஜீவன் போகும்போது நம்முடன் வரும் தயாபரனும் இவன்தான். இம்மையில் நமக்கு மறுமை தருவது மட்டுமல்லாது இப்போதுள்ள வாழ்க்கையில் நன்மைகள் பல செய்திடும் காருண்ய சீலன். இத்தலத்தில் ஞாயிறு, வியாழன் விசேஷமான நாட்களாகும். ஞாயிறு காலபைரவருக்கும், வியாழன் தட்சணாமூர்த்தி வழிபாட்டிற்கும் உகந்த ஸ்தலம்.
இங்கு ஆலய வலம்வருதல் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையில் உள்ளது. மேஷம், விருச்சிக ராசிக்காரர்களில் செவ்வாய் தசை நடப்பவர்கள் ஆலயத்திற்கு வந்து செவ்வாய் தோறும் சிவனை வேண்டினால் வேண்டிய வரங்கள் பெறலாம். மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கான தலம் இது. நிலம், மண், மனை சம்மந்தமான இடர்பாடுகளை நீக்க வல்லவர் இத்தல ஈசன். இது சம்மந்தமான பிரச்னையுள்ளவர்கள் பிரச்னையான இடத்தில் உள்ள மண்ணை ஒருபிடி எடுத்து மஞ்சள் துணியில் கட்டி சிவனின் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் அந்த மண்ணை அந்த இடத்தில் போய் போட்டுவிட பிரச்னைகள் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் அனுபவம்.
இங்குள்ள ஜுரஹர லிங்கம் மற்றும் ஜுர சக்திக்கு ஒவ்வொரு திங்களும் சூரிய அஸ்தமன நேரத்தில் மிளகு, பால், ரசம் சாதம், இளநீர் படைத்து பூஜை செய்யப்படும். தீராத விஷக்காய்ச்சல் உள்ளவர்கள் அர்ச்சனை செய்து ரசம் சாதம் பெற்று சாப்பிட்டால் எந்த விதமான காய்ச்சலும் சரியாகும் என்பது ஐதீகம். அம்மன் சந்நதியை சுற்றி இச்சா சக்தி, கிரியா சக்தி, சரஸ்வதி என சக்தியின் பல வடிவங்கள் சிலைகளாக இருப்பதைக் காணலாம். அம்மன் சந்நதியின் சுற்றுப் பகுதியில் பிரம்மா இடம் பெற்றுள்ளார். அம்மன் சந்நதியின் சுற்றுப் பிராகாரத்தில் பல்வேறு அம்மனின் வடிவங்கள் ஓவியங்களாக வரையப்பெற்றுள்ளது கண்கொள்ளாக் காட்சி. கோயிலின் முகப்பு பகுதியிலேயே சுந்தரேஸ்வரர், மீனாட்சி சேர்ந்து லிங்கத்தை வழிபடுவது போல் அமைக்கப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 18 சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. சிவனும் பல திருவிளையாடல்களில் எல்லாம் வல்ல சித்தராகவே வருகிறார். இதனை குறிக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோயிலில் எல்லாம் வல்ல சித்தர் சந்நதி அமைந்துள்ளது. அதே போல் இங்கும் எல்லாம் வல்ல சித்தருக்கு சிறிய சந்நதி அமைக்கப் பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும். பொதுவாக கோயில்களில் காலபைரவருக்கு ஒரு சிறிய சந்நதி இருக்கும். ஆனால், இங்கு தனிக்கோயில் அமைப்போடு பலி பீடம், கொடி மரம், முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறையோடு பக்தர்கள் வலம் வரும் வகையில் அமைந்துள்ளது. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
மேலும், ஒவ்வொரு ஞாயிறு தோறும் ராகுகாலத்தில் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறும். காலபைரவர் நெருப்பை கிரீடமாகவும், பாம்புகளை ஆயுதமாகவும், இடதுகையில் மாமிசத்தையும், வலது கையில் சூலத்தையும், மற்ற கைகளில் உடுக்கை, பாம்பை ஆயுதமாகக் கொண்டு ஆனந்தமான முகத்தோடும் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் மகா வில்வமாகும். வில்வ இலைகள் பொதுவாக மூன்று இலைகள் கொண்டதாக இருக்கும். இங்கு 10 இதழ்கள் கொண்டதாக அமையப்பெற்றுள்ளது சிறப்பாகும். வில்வ இலைகள் மருந்தாக சகல வியாதிகளையும் தீர்க்க வல்லவையாக அமைந்துள்ளது. இங்குள்ள தீர்த்தம் சுப புஷ்கரணி என அழைக்கப்படுகிறது.
இங்கு பிரம்மோற்சவம் மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறுவது போல் இங்கு 8வது நாளில் மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் (இந்த வருடம் 10.3.2017 அன்று), தீர்த்தவாரி நடைபெறும். இங்கு மார்கழி மாத வழிபாடு செய்பவர்களுக்கும், திருவாதிரை முதல் நாள் எண்ணெய்காப்பு உற்சவத்தில் பங்கேற்று எண்ணெயை பிரசாதமாக பெறுபவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். தத்துவக் குவியல்கள் நிறைந்த தயாபரனை தரிசிப்போருக்கு வேண்டியது என்ன, தன்னையே தரும் தயாபர வள்ளல் இவன். இம்மையில் மட்டுமல்லாது இப்போதே ஈசனின் திருவடி படர்வோம். பெருவாழ்வு வாழ்வோம்" - சிவனை வணங்கும் சிவன்


கருத்துகள் இல்லை