ஒளியிலே தெரிவது டேட்டா தான்...!
"ஒளியிலே தெரிவது டேட்டா தான்..! #Li-FiTechnology
முன்பெல்லாம் வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் குடிக்க தண்ணீரும், சாப்பிட எதாவது கொடுப்பதும் வழக்கம். இப்போது அந்த உபசரிப்பு பட்டியலில் வைஃபை பாஸ்வேர்டும் சேர்ந்து விட்டது. ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து அத்தியாவசியம் என்ற நிலைக்கு இணையம் வந்து பல காலம் ஆகிவிட்டது. இணையத்தின் வேகத்தை கூட்டவும், இன்னும் மேம்பட்ட சேவைகள் கிடைக்கவும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது Li-Fi.
Li-fi என்றால் என்ன?
இருட்டில் டார்ச் லைட் அடிக்கும் போது, அந்த ஒளி செல்லும் பாதையை கவனித்ததுண்டா? பல நுண்ணிய துகள்கள் அதில் பயணிப்பது தெரியும். அது போல, டேட்டாவை ஒளி மூலம் கடத்துவதுதான் Li-fi தொழில்நுட்பம்.
இப்போதிருக்கும் wifi டெக்னாலஜியில், வீடு வரை கேபிள் மூலம் வரும் இந்த டேட்டா, வயர்லெஸ் மோடம் மூலம் ரேடியோ அலைகளாக மாற்றப்படுகிறது. ரேடியோ அலைகளில் டேட்டா நமது மொபைல் அல்லது லேப்டாப்புக்கு கடத்தப்படுகிறது. அங்கே அந்த அலைகள் டீ-கோட் செய்யப்பட்டு தேவையான தகவல்களாக ஸ்க்ரீன் தெரிகிறது. இந்த ரேடியோ அலைகளின் வேகம் தான் இப்போது வைஃபையின் வேகத்தை நிர்ணயிக்கிறது.
Lifiயில் இந்த டேட்டா ஒளியின் மூலம் கடத்தப்படுவதால் அதன் வேகம் அதிகம். வைஃபையின் வேகத்தை விட பத்து மடங்கு அதிக வேகத்தில் டேட்டா பயணிக்கும்.
எப்படி செயல்படுகிறது?
எல்.ஈ.டி. பல்புக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் போது அது ஃபோட்டானை வெளிப்படுத்துகிறது. அந்த ஃபோட்டானைத்தான் நாம் வெளிச்சம் என்கிறோம். எப்போதாவது லோ-வோல்டேஜில் மின்சாரம் வரும்போது அந்த ஒளி குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். பல்புக்கு வரும் மின்சாரத்தின் அளவை கட்டுப்படுத்தினால் பல்பும் அதற்கேற்றது போல ஃபோட்டானை வெளிப்படுத்தும். Lifi வசதி இருக்கும் மொபைல் அல்லது லேப்டாப் அந்த சிக்னலை டீ-கோட் செய்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளும்.
யார் கண்டுபிடித்தது?
ஜெர்மனை சேர்ந்த பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் என்பவர்தான் Li-fiயின் பிதாமகர். 2011 ஆம் ஆண்டு ஒரு கருத்தரங்கில் ஒளியால் டேட்டாவை கடத்த முடியும் என்ற தியரியை அவர்தான் முன் வைத்தார். அடுத்த ஆண்டில் இந்த தொழில்நுட்பம் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்த சிலரை ஒன்று சேர்த்து ’Pure Lifi' என்ற குழுவை உருவாக்கினார். இவர்கள் இதுவரை Lifiல் இயங்கும் இரண்டு புராடக்டுகளை தயாரித்திருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
லைஃபை சிறப்புகள்:
100 MBPSக்கே நம்ம ஊர் நெட் நொண்டியடிக்க, 10GBPS எளிதில் கடத்தி சோதனையில் வெற்றிப்பெற்றிருக்கிறது லைஃபை. வைஃபை சிக்னலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்க முடியாது. அதாவது நமது வீட்டைத் தாண்டி சிக்னல் போகாமல் பார்த்துக் கொள்ள லைஃபையில் வழியுண்டு என்பதால் பாதுகாப்பானது. ரேடியோ அலைகளோடு ஒப்பிடுகையில் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது. வீடுகளின் கூரைகள் மீது பொருத்தப்பட்ட சோலார் தகடுகள் பிராடுபேண்டு ரிசீவர்களாக செயல்படும் சாத்தியங்களும் இருக்கிறது. அதாவது நம் வீட்டுக்கு வரும் இணைய கேபிளுக்கும் குட்பை சொல்லிவிட்டு, அதையும் நேரிடையாக அருகில் இருக்கும் டவரில் இருந்து இணையத்தை பெற முடியும் என்கிறார்கள்.
வைஃபையில் ரேடியோ அலைகள் இருப்பதால் மருத்துவமனை, விமானங்கள், மற்றும் பல பாதுகாப்பான பகுதிகளில் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கெல்லாம் லைபை முக்கிய பங்காற்றும்.
குறைகள்:
லைஃபை என்பது வைஃபைக்கு மாற்று என சொல்ல முடியாது. ஒளி நாம் போகும் எல்லா இடங்களுக்கும் வந்துவிடாது. இதை இன்னொரு வயர்லெஸ் தொழில்நுட்பமாக மட்டுமே கருத முடியும். ஆனால், விலை குறைந்த, எந்த பாதகமும் இல்லாத எளிமையான, வேகமான தொழில்நுட்பம் என்று சொல்லலாம்.
ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றாலும் லைஃபை புராடக்டுகள் சந்தைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அது வரும்போது மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நமக்காக காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்." - ஒளியிலே தெரிவது டேட்டா தான்..!
கருத்துகள் இல்லை